Header Ads

வாங்கிய கடனும், கொடுத்த கடனாலும் அவதிப்படுகிறீர்களா ? பிரச்சனைகளை தீர்க்கும் தோரண கணபதீ வழிபாடு

வாங்கிய கடனும், கொடுத்த கடனாலும் அவதிப்படுகிறீர்களா? தோரண கணபதியை வழிபட்டால் பிரச்சனை எளிதாக தீரும்



இடத்திற்கேற்றபடி அமர்ந்தருளும் ஆனைமுகனைப் பற்றி ‘ஆலயமும் கணபதி அம்சங்களும்’ என்ற விதிகளின்படி, சிவாலயங்களில் அம்மன் சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி மூர்த்தங்கள், சக்தி வாய்ந்தவை. இந்த மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் தோரண கணபதி எனப்படுகிறார்.

தோரண கணபதியின் அருட்தன்மை சக்தி தேவி தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில் தோரண வாயில் என்ற அமைப்பு உள்ளது.

அதனுள் பிரவேசிக்கும்போது பலிபீடத்திற்கு அருகில் வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீதோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அனைத்து வகையான கணபதி மூர்த்தங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்தத் தோரண கணபதிக்கு இருக்கிறது. ஜடாமகுடமும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் வலக்கரத்தில் அங்குசமும் இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் மோதகமும் வலக்கரத்தில் தந்தமும் வைத்துக்கொண்டு வலக்கையில் உள்ள தந்தத்தைப் பயன்படுத்தி தன்னை வணங்குவோர் வாழ்வில் உள்ள கடன் என்கின்ற ருணத்தைத் தீர்த்து அருள் செய்கிறார் என்று சிவாகமத் துதிகள் சொல்கின்றன.

மூல ஆலயத்திலிருந்து நோக்கும்போது இவர் அமர்வது பிரம்ம ஸ்தானமாக அமைவதால் கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். எப்போதுமே வலம்புரி கணபதியாக இருப்பவர்; அதிக சாந்நித்தியம் உடையவர். பத்ம பீடம் என்கிற தாமரை பீடத்தில் அமர்ந்தவராய் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சத்தை அருளும் சக்தி கொண்டவர் இவர். கோஷ்டங்களை ஒட்டிய மேகலைப் பகுதியிலும் தோரண வாயிலுக்கு எதிராகவும் அமரும் கணபதிக்கு இந்த விசேட சக்தி உள்ளதால், அத் தலங்களுக்குச் சென்று வணங்கினால் பலனும் கிடைத்து விடுகிறது.



பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி ஆகிய இடங்களிலும், சிருங்கேரி சாரதா பீடத்துடன் கூடிய சாரதாம்பாள் சந்நதியிலும் தோரண கணேசர் அமர்ந்துள்ளார். கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். மானுட கடனைத் தீர்க்கக் கணபதி வழிபாடு உகந்தது. ருணம் என்ற கடனைத் தீர்க்காதுவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நலம் தரவல்லது இந்த கணபதி வழிபாடு.

தோரண கணபதி சந்நதிக்கு செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாள் என்று ஆறு வாரங்கள் சென்று கணபதியின் மேகலை முன்பாக மூன்று நெய்தீபங்கள் ஏற்றி முப்பழங்களாக மாதுளை, மா, கொய்யா இவற்றை (தோரண கணபதிக்கு பிடித்த பழங்கள்) வைத்து அறுகம்புல்லைச் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும்.

‘‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, ருணமோசன வ ல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா’’ என்றும், தமிழில் ஒரு விசேடப் பாடலான தோரண கணபதி துதியையும் கூறவேண்டும்:

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதயே! தோன்றிடுக என் கண்முன்னே!

வாங்கிய கடனை அடைக்க இயலாமல் அவஸ்தைபடுவோரும், கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாமல் அல்லல்படுவோரும் முதலுக்கு மோசம் இன்றி பணம் திரும்ப வந்தால் போதும் என்று நினைப்பவர்களும், இந்த விசேட கணபதிப் பெருமானை வழிபட்டுப் பலன் அடைய முடியும். நமது பூஜையால் மகிழ்ச்சி அடையும் தோரண வாயில் கணபதி தன்னுடைய எழுத்தாணிபோல் உள்ள தந்தத்தால் நம்மை நெருக்குகிற கடன் தீரும்படி தீர்ப்பு எழுதிவிடுவார் என்பது நம்பிக்கை.

சிறிதாகவோ, பெரிதா கடன் உள்ளவர்கள் சுக்கில சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று காலை, மாலை இருவேளைகளிலும் ருணவிமோசனம் தரும் தோரண கணபதி முன்பாக கூட்டாக யக்ஞம் செய்து வழிபடலாம். ரட்சைகள் செய்தும் கையில் கட்டிக் கொள்ளலாம்.
ருணவிமோசன அக்னி வழிபாடு முறையாக கல்ப விதியின்படி 32 வகையான யாகக் கூட்டுப் பொருட்களால் தோரண கணபதி முன் யக்ஞம் செய்தல் வேண்டும். இதை ஆறு வாரங்களோ, ஆறு சதுர்த்தி திதியிலோ செய்யவேண்டும்.

No comments

Powered by Blogger.